501. குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் - TPV19
திருப்பாவை பத்தொன்பதாம் பாடல்
நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் துயில் எழுப்புதல்
ஸஹானா ராகம், ஆதி தாளம்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
பொருளுரை:
"நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, தந்தத்தினால் ஆன, மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து உறங்கும் (நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த) கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் நீ பேசுவாயாக!
(பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான, நீண்ட கண்களையுடையவளே, உன் கணவனான கண்ணனை எவ்வளவு சமயமானாலும் நித்திரை துறந்து எழுந்திருக்க நீ சம்மதிப்பதில்லை. ஒரு நொடிப்பொழுதும் அவனது பிரிவைத் தாங்க இயலாதவளாக இருக்கிறாய்! நீ இப்படிச் செய்வது நியாயமன்று, உன் இயல்புக்கும் தயாள குணத்திற்கும் தகுந்ததன்று!
பாசுரச் சிறப்பு:
திருப்பாவையின் மூன்று பாசுரங்களில் நப்பின்னை பிராட்டி துயிலெழுப்பப்படுகிறாள். அதாவது 18,19 மற்றும் 20வது பாசுரங்களில். அவற்றில் இது இரண்டாவது ஆகும். சென்ற பாசுரத்தில் நப்பின்னையை "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்றழைத்த ஆண்டாள், இப்பாசுரத்தில், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை" என்றும், அடுத்த பாசுரத்தில் (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று) "செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்கல் நப்பின்னை நங்காய்" என்றும் இளைய பிராட்டியைப் போற்றுகிறார்.
அதாவது, பிராட்டியை 3 தடவை போற்றிப் பாடுகிறார் கோதை நாச்சியார். சென்ற பாசுரத்தில் சொன்ன, கோழி 3 தடவை கூவுவதற்கான காரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்.
'பஞ்ச சயனம்' என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை என்பது நேரடியான பொருள்.
இப்பாசுரத்தில் வரும் "பஞ்ச சயனம்" என்பது ஒரு வைணவன் அறிந்திருக்க வேண்டிய 5 பொருட்களை குறிப்பது என்பது உள்ளுரையாம். அவை:
பரமாத்ம தோற்றம் என்கிற "மிக்க இறைநிலை"
ஜீவாத்ம தோற்றம் என்கிற "உயிர்நிலை"
மோட்சம் கை கூடுவதற்கு உதவும் வழிவகையான "தக்க நெறிகள்"
பரமன் திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளாம் "ஊழ்வினைகள்"
பரமாத்ம அனுபவம் என்கிற "வாழ்வினை" (முக்தி அல்லது மோட்சம்)
இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். கோபியர் "அம்பரமே தண்ணீரே" பாசுரத்தில் கண்ணனை மட்டும் (பிராட்டியை விடுத்து) எழுப்ப முயற்சித்தார்கள். அடுத்து, "உந்து மத களிற்றன்" பாசுரத்தில் பரமனை விடுத்து பிராட்டியை தனியாக துயிலெழுப்பப் பாடினார்கள். என்ன ஆயிற்று ? கண்ணனும் எழுந்திருக்கவில்லை, நப்பினையும் எழுந்திருக்கவில்லை :-)
அதனாலேயே, இப்பாசுரத்தில் "மலர்மார்பா" என்று கண்ணனையும் "மைத்தடங் கண்ணினாய்" என்று பிராட்டியையும் சேர்த்தே துயிலெழுப்ப முனைகிறார்கள்! அதாவது, வைணவ அடியவரின் மோட்ச சித்திக்கு பகவான்-பிராட்டி என்று இருவரும் திருவுள்ளம் வைக்க வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம். பிராட்டியின் பரிந்துரை (வைணவத்தில் இதற்கு புருஷகாரம் என்று பெயர்) அடியவர் முக்திக்கு அவசியம் என்பது வைணவக் கோட்பாடு.
இந்த திருக்குணத்தைத் தானே நம்மாழ்வார், "நின் திருவருளும்* பங்கயத்தாள் திருவருளும்" என்று ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்!
பண்டைநாளாலே நின் திருவருளும்* பங்கயத்தாள் திருவருளும் கொண்டு*
நின்கோயில் சீய்த்துப் பல்படிகால்* குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே.
“மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்!” என்று கோபியர் இருக்க, நப்பின்னை பிராட்டியோ "கொத்தலர் பூங்குழலுடன்", "மைத் தடங்கண்ணினாய்" ஆக பரமனை இறுகப் பற்றிக் கொண்டு அவனை துயிலெழ விடாமல் செய்வது கண்டு கோபியர் பிராட்டியிடம் 'இது உன் இயல்புக்கு தகாது' என்று சொல்லி, கிருஷ்ண பக்தியில் மனம் உருகி நிற்கின்றனர்.
இருந்தும், கோபியர் இவ்வளவு வருத்தத்துடன், சற்று கடுமையாகவேப் பேசியும் கூட கதவு ஏன் திறக்கவில்லை ? சில சமயங்களில், பரமன், பிராட்டி என்று இருவருமே, அடியவரின் உதவிக்கு விரைந்து வர நினைத்து, யார் முதலில் செல்வது என்று அவர்களுக்கு இடையே போட்டியே வந்து விடுகிறது!!! அதனால் பக்தனுக்கு திருவருள் கிட்ட தாமதமாகி விடுகிறது. இப்போதும் யார் சென்று கதவைத் திறப்பது என்ற குழப்பத்தினால் தான் கதவு திறக்க இத்தனை தாமதம் :)
இன்னொரு ரசமும் இதில் உள்ளது. சென்ற பாசுரத்தில் "சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்" என்று நப்பின்னை பிராட்டியை கோபியர் அழைத்தபோது, கண்ணன் தானே கதவைத் திறக்க அவசரமாக எழுந்து செல்ல முற்பட்டபோது கால் தடுக்கி, நப்பின்னை மேல் விழுந்து விடுகிறான்! அடியவர் குறை தீர்க்க பரமன் படும் அவசரம் நமக்குத் தெரியாதா என்ன? பரமனும் பிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, அப்படியே இருந்து விட கதவு திறக்கத் தாமதம் :)
திருமங்கையாழ்வாரின் "கஜேந்திர மோட்சம்" குறித்த பாசுரத்தை விளக்கும்போது, முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் !
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
'ஆதிமூலமே' என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !
தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் !
இது பற்றி, இ.ரா.முருகன் சுவையாகச் சொல்வதை வாசியுங்கள் :)
************************
தத்துவார்த்தத்துக்குள் புகுந்து குழப்பாமல் மேலிடக் கிடைக்கிற அர்த்தத்திலேயே விரசம் இல்லாத விளக்கத்தைத் தர ஆண்டாள் இடம் வைத்திருக்கிறாள். கூர்மையான கவிதையின் சக்தியே அது தானே!
அப்படி அறைக்கு வெளியே நிற்கும் பெண்களுக்குக் கதவு திறக்க 'நீயா நானா' என்று போட்டி நடக்கிறது உள்ளே. ஒரு மல்லுக்கட்டு போல physical ஆக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கதவைத் திறக்க எழ முயன்றார்கள் தெய்வ தம்பதிகள். நப்பின்னை உடல்வலுவில் குறைந்தளாதலால் மார்போடு இறுக்கி அவளை எழவிடாமல் படுக்கையில் கிடத்தி அவள் மேல் தன் முழு பலத்தை வைத்து அவளிடமோ வெளியில் இருக்கிறவர்களிடமோ குரல் காட்டாமல் நேரம் கடத்தினான் கண்ணன். இது இயல்பான ஆண்தன்மை. என்ன செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று பார்க்கும் குறுகுறுப்பு. நப்பின்னைக்கோ பேச முடியவில்லை. நடப்பதைச் சொல்ல முடியவில்லை. தானும் எதுவும் செய்யவும் முடியவில்லை.
பஞ்சசயனம் மீது படுத்திருக்கிறாள் நப்பின்னை.கொத்துகொத்தாய் மலரைச் சூடியிருக்கிறாள் அந்த நப்பின்னை.அந்த நப்பின்னையை அணைத்த அதனால் மலர்ந்த அழகிய மார்பையுடைய கண்ணன் அவள் மேல் தன் எடை அழுந்தப் படுத்திருக்கிறான். நகரவும் முடியவில்லை.
இது தான் 'குத்து விளக்கெரிய' பாசுரத்தின் திவ்யமான சாராம்சம்.
************************
இப்பாசுரத்தில், "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா" என்று ஆண்டாள் பாடும்போது, பிராட்டியின் தாய்மைக்குரிய பேரன்பை 'கொங்கை' என்ற சொற்பிரயோகத்தின் வாயிலாக குறிப்பில உணர்த்துகிறார்! பரமனிடம் ஆலோசிக்காமலலேயே பிராட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். ஆனால் பெரும்பாவம் செய்தவர்களைக் கூட, பரமனிடம் ஆலோசிக்காமல், ஒருபோதும் பிராட்டி தண்டிக்க மாட்டாள். அப்பேர்ப்பட்ட கருணை மாதா அவள். "மலையப்பா! உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை" என்று ராஜாஜி போற்றிய தாய் அவள்!
பராசர பட்டர் மிகவும் உகந்த பாசுரம் இது. இந்த பாசுரத்தின் அடிப்படையில் தான், திருப்பாவைக்கு அவர் எழுதிய வடமொழித் தனியனான “நீளா துங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத் போத்ய க்ருஷ்ணம்” என்பது அமைந்தது, என்பது குறிப்பிட வேண்டியது.
பாசுரப் பதங்களுக்கு உள்ளுரை:
குத்து விளக்கெரிய - ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது. இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல)ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம். குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது, பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்), விபவ (அவதார நிலைகள்), அர்ச்ச (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும் அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.
இன்னொரு விதத்தில் "குத்து விளக்கெரிய" என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு, அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!
அன்னங்கராச்சார் சுவாமிகள் "குத்து விளக்கு" (பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாக உரை எழுதியிருக்கிறார். தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.
ஒரு குத்து விளக்கில ஆண்டாள் எவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறாள் பாருங்கள் :-)
கோட்டுக்கால் கட்டில் - கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி) என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.
இன்னொரு விதத்தில், இவை "நான்" என்ற அகந்தையின் 4 நிலைகளை (நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம். பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! "நான்" என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி - பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை (அ) ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட) குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை "மேலேறி" என்பது உணர்த்துகிறது!
கொத்தலர் பூ - பரமனையும், பிராட்டியையும் சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டத்தைக் குறிக்கிறது.
மலர் மார்பா - பரமனின் கருணை வடிவைக் குறிக்கிறது.
வாய் திறவாய் - திருவருளுக்காக தொழுது நிற்கிறோம், எங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்வாய்! நம்மாழ்வாரின் திருவாய்மொழி வாக்கியத்தை "தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன் தாமரைக் கண்களால் நோக்காய்*" நினைவு கூர்க!
மைத்தடங்கண்ணினாய் - கிருஷ்ண பக்தியில் (மை) உருகி நிற்கும் உத்தம அடியவரைக் குறிக்கிறது.
நீ உன் மணாளனை - ஆச்சார்யனை (குருவை) குறிப்பில் சொல்வதாம்.
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் - எங்கள் அஞ்ஞான இருளை விலக்க வல்ல குருவின் உபதேசத்தை அடியவர் நாங்கள் பெற தடையாக இருத்தல் கூடாது!
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று - பரமனை விட்டு பிரியாத நிலை வேண்டும் வேண்டும் அடியவர் மனநிலையை குறிப்பில் உணர்த்துவதாம்! அதுவே பேரின்பம் (தத்துவம்). மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்கிக் கொள்வது தத்துவமன்று!!!
"அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு" என்று விஷ்ணுசித்தர் பாடியதை நினைவு கூர்க :)
தகவேலோ - பரமனின் முழுமையான அருளின்றி, மேற்கூறியது (முக்தி) நடைபெறாது.
மேலும், இங்கு "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா" என்ற கோதை நாச்சியார் வாக்கியம், "அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா" என்ற நம்மழ்வரின் பாசுர வரியை நினைவூட்டுகிறது தானே!
தத்துவம் = தத் + த்வம் = பரமன் + பிராட்டி எனும்போது, திருமாலும் திருமகளும் பிரிக்கமுடியாதவர் என்பது விளங்குகிறது.
சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம்!
எ.அ.பாலா
5 மறுமொழிகள்:
Test !
எத்தனை விசயங்கள். மிக அருமையான பதிவு. கோடிட்டு காட்டி பின்னூட்டம் இட்டால் பதிவை விட பெரிய பின்னூட்டம் ஆகிவிடும் அத்துணை விசயங்கள் கவர்ந்தன இந்த பதிவில். இருந்தாலும் பஞ்ச சன்னியத்தில் பல்முனை விளக்கம், குத்து விளக்கிற்குள் குத்தி வைத்த விளக்கங்கள், கோட்டிகால் கட்டிலிருக்கு கீதையை கோதையோடு இணைத்த விதம், நம்மாழ்வார், பெரியாழ்வார் பாசுரங்கள், இன்னும் பற்பல. வார்த்தை கிட்டவது கடினம் எ.ஆ.பாலா. வாழ்த்துகள். நன்றிகளும் கூட.
நன்றி மின்னல்
//குத்து விளக்கிற்குள் குத்தி வைத்த விளக்கங்கள்,
//
:)
இ.ரா.முருகன் மடல் வழி அனுப்பிய செய்தியிலிருந்து:
ரா.கா.கியில் நான் என் நண்பர் (காலம் சென்ற) சதாரா மாலதி எழுதிய அருமையான திருப்பாவை உரையைத் தினமும் வெளியிட்டு வந்தபோது அதில் இந்தப் பகுதி இருந்ததாக நினைவு...
அன்புடன்
Bala
Simply Superb
Post a Comment